Advertisements

உள்ளத்தில் விழுந்த சவுக்கடி – சிறுகதை

 

உள்ளத்தில் விழுந்த சவுக்கடி – சிறுகதை

உள்ளத்தில் விழுந்த சவுக்கடி – சிறுகதை

“ஏ…வெள்ளையம்மா! ஒன்னோட புருஷன் ஆலமரத்துப் பிள்ளையார் கோவில் பக்கத்திலே

நெனைவு இல்லாமல் குடித்துப் போட்டு விழுந்துகிடக்கான். நீ வெரசாப் போய்ப்பார்.!“ என்று வெள்ளையம்மாள் வசிக்கும் குடிசையில் வந்து குரல் கொடுத்தாள், எதிர்வீட்டில் குடியிருந்து வரும் பொன்னம்மாள்.

‘இந்த பாவி மனுஷனுக்கு என்னத்த சொன்னாலும் கேட்கமாட்டங்கறானே, குடும்ப நெலமை தெரியாமல் இப்படிகுடிக்கிறானே ‘என தனக்குத்தானே வெள்ளையம்மாள்  புலம்பிக் கொண்டு“ ஏலே சின்னராசு வட்டிலிலே பழைய கஞ்சி ஊத்தி வெச்சிருக்கேன். கஞ்சியகுடிச்சிட்டு, வீட்டுக் கதவை சும்மா சாத்திட்டு பள்ளிக்கு போ”என தன் மகனிடம் கூறிச் சென்றாள்.

வெள்ளையம்மாளும் வெள்ளைச்சாமியும் படிப்பறிவு இல்லாதவர்கள். இருவரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் குடிசையில் வாழ்ந்து வருகிற கணவன் மனைவி. கூலி வேலை பார்க்கும் வெள்ளைச்சாமி நாள்தோறும் கூலிக்கு என்ன வேலை கிடைக்கிறதோ அதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவனுக்குக் கிடைக்கிற கூலியை முழுசாக வெள்ளையம்மாளிடம், அவன் ஒரு நாள் கூட கொண்டு வந்து கொடுப்பதில்லை. அவனுக்கு குடிதான் சொர்க்கம் .மற்றபடி தன் மனைவி பற்றியோ, ஆறாவது படிக்கும் தன் மகன் சின்னராசு பற்றியோ எந்தக் கவலையும் பட மாட்டான். அவன் மனைவி வெள்ளையம்மாள் பக்கத்துதெருவில் நாலைந்து வீடுகளுக்குச் சென்று பத்து பாத்திரங்கள் தேய்த்து அவர்கள் கொடுக்கும் கூலியையும், அவர்கள் வீட்டில் கொடுக்கும் மீதமான உணவையும் வாங்கி வந்து, தனக்கும் தன் மகன் சின்னராசுக்கும் கொடுத்து தன் பிழைப்பை நடத்தி வந்தாள்.

மகனுக்கு விபரம் தெரிந்தவுடன் “அம்மா, ஒன்னை அப்பா ஏன் தெனமும் அடிக்கிறாரு“ என்று கேட்டதற்கு “எல்லாம் என் தலைவிதி. அதெல்லாம் ஒனக்குத் தெரிய வேண்டாம். உன் அப்பனை மாதிரி நீயும் குடிகாரனாக மாற வேண்டாம்” என்று கூறியும் சமாளித்துக் கொண்டிருந்தாள்.  வெள்ளையம்மாள் தனது கையில் எடுத்துச் சென்ற பிளாஸ்டிக் குடத்து தண்ணீரைக் கணவன் வெள்ளைச்சாமி தலையில் கொட்டினாள். அவள் தண்ணீரை அவன் தலையில் கொட்டியவுடன்“ என்ன திடீருன்னு மழை பெய்து..“என்று வெள்ளைச்சாமி கத்தினான்.

“ஆமா, நீ இருக்கிற எடத்திலே மழையாப் பெய்யும்? வெயில் தான் நல்லா அடிக்கும். எழுந்துநில்லு, வா நம்ம வீட்டுக்குப் போகலாம்“ என்று கூறிக்கொண்டே அவனைக் கைத்தாங்கலாக வெள்ளையம்மாள் அழைத்துச் சென்றாள். வெள்ளைச்சாமி வீட்டிற்குள் தள்ளாடிசென்று சுய நினைவுக்கு வந்தவுடன், “ஏண்டி வெள்ளையம்மா , நான் பேசாம சிவன்னேன்னு பிள்ளையார் கோவில் மரத்தடியில் படுத்திருந்த வனை, ஏன் கூப்புட்டு வந்தே?

நீ வீட்லே எனக்கு மீன் கொழம்பு சோறாக்கி வெச்சிருக்கியா. ”என்று கண்டபடி பேசிக் கொண்டே, திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, நடிகை கோவை சரளாவை கன்னத்தில் ஓங்கி அடித்து, காலால் மிதித்துத் தள்ளுவதைப் போல் அவன் வெள்ளையம்மாளை மிதித்துத் தள்ளினான்.

“அட பாவிமனுஷா!நான் நேத்து தான் ஊருக்காரங்களோட சேர்ந்து இந்தப் பாழாப் போன மதுக்கடையைத் தெறக்க வேண்டாம்னு தான் கடையில் இருந்த பாட்டிலெ ல்லாம் கீழே போட்டு நொறுக்கிட்டு வந்தேன். நீ தினமும் இப்படி குடிச்சிட்டு வந்து வீட்டில் இந்தக் கூத்துப் பண்றே. நீ எப்பதான் திருந்தப் போறியோ?என் கஷ்டம் உனக்கும் புரிய மாட்டங்குது. உன்னைப் போன்ற குடிகாரங்களாலே குடும்பம் கஷ்டப் படுவதைப் பத்தி இந்தக் கவர்மெண்டுக்கும் புரியமாட்டங்குது” என்று தன் தலையில் அடித்துக் கொண்டு வெள்ளையம்மாள் அழுதாள்.

இரவுவந்தவுடன் வெள்ளைச்சாமி வழக்கம்போல் வெள்ளையம்மாளை சமாதானப் படுத்தினான். வெள்ளையம்மாகண்ணு! இனிமே நான் சத்யமாக குடிக்கமாட்டேன்.  தெனமும் எனக்கு கெடைக்கற கூலிக்காசை, அப்படியே வந்து உன்னிட்ட கொடுத்தி டறேன்” என்று கூறிக்கொண்டே அவள் கன்னத்தினை மெதுவாகத் தடவிக் கொடுத்து விட்டு, நான் பெலமா அடிச்சிட்டேன்னா? வலிக்குதா?” அவள் மேல் அக்கறை உள்ளவன் போல் கேட்டுக்கொண்டே அவளைத் தொட்டவுடன், அவளும் அவன் சொல்லிலும் செயலிலும் மயங்கி அவனை இதமாக அணைத்தாள்.

மறுநாள் காலை வெள்ளைச்சாமி எழுந்தவுடன் கூலி வேலைக்கு கிளம்புவதற்குத் தயாராக குடிசையின் முன்நின்றான். அப்போது அவன் மகன் சின்னராசு அவனிடம் “அப்பா! எனக்கு நோட்டு வாங்க முப்பது ரூபா பணம் கொடுப்பா…. .நோட்டு இன்னிக்கி நான் கொண்டு போகலன்னா வாத்தியார் என்னை அடிப்பாருப்பா“ என்று அவன் அழுவது போல் பயந்து கொண்டே கேட்டான்.

“சின்னராசு! நீ இன்னிக்கி ஒரு நாள் மட்டும் எப்படியாவது சமாளி, இன்னிக்கி எனக்கு வர்ற கூலி யெல்லாம் உனக்கு நோட்டு வாங்கத்தான் போதுமா !“என்று அவனை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்தான். சின்னராசுவும் அவன் அப்பா கூறியதை நம்பினான்.

வெள்ளைச்சாமிக்கு அன்று மதியமே நூறு ரூபாய் கூலி கிடைத்தது. அவனுக்கு உட னே மகன் சின்னராசு நோட்டு வாங்க பணம் கேட்டது நினைவு வந்தவுடன், வீட்டுக் குப் போய்தான் சாப்பிட்டு விட்டு மகனிடம் பணத்தையும் கொடுத்து விட்டு வந்து விடலாமென்று,  வேகமாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். அப்போது அவன் எதிரே வந்த, அவனுக்குத் தெரிந்த கூலி வேலை செய்யும் முனியாண்டி“ என்ன வெள்ளச்சாமி, வேகமாக எங்கே போறப்பா” என்று கூறிக் கொண்டே, அவன் தோளில் கை போட்டுக் கொண்டான். வெள்ளைச்சாமி தன் மகன் நோட்டு கேட்ட விபரத்தினை கூறியவுடன் முனியாண்டி “வெள்ளச்சாமி!இப்ப வாத்தியாரெல்லாம், பசங்களை அடிக்க மாட்டாங்கப்பா, அப்படி அந்த வாத்தியார் உன் மகனை அடித்தால், நாம போய் உண்டு இல்லை யான்னு அந்த வாத்தியாரைப் போய் பார்த்திடுவோம். நீ கவலைப்படாதே வாப்பா! நூறு அடிச்சிட்டு வீட்டுக்குப் போவோம்” என்று கூறி வெள்ளைச்சாமி மறுத்தும் அவனுக்கு ஆசை காட்டி, அவனை மதுக்கடைக்கு இழுத்துச் சென்றான்.

வெள்ளைச்சாமி மதுக்கடைக்குள் சென்றவுடன் மனைவியை மகனை மறந்தான் குடும்பம் இருக்கும் நிலைமையையும் மறந்து கையில் உள்ள பணத்தைக் காலி செய்தான்.  வழக்கம் போல் ஆலமரத்தடியில் விழுந்து கிடந்தான். வெள்ளையம்மா ள் வழக்கம்போல் அவனை வீட்டிற்கு அழைத்து சென்றவளுக்கு வீட்டிற்குள் சென்ற வுடன் அடி உதைதான். அவனுக்குப் போதை தெளிந்தவுடன்“ வெள்ளையம்மா, இனிமேல் நான் குடிக்க மாட்டேன். நம்ம மகனைப் படிக்க வைக்க கண்டிசனாக குடிக்க மாட்டேன். அந்த ஆலமரத்துப் பிள்ளையார் மேல் சத்யம்” என்றுகூறினான்.

அவன் மறுநாள் காலை கூலி வேலைக்காக கிளம்பி வாசலில் நின்றான். மகன் சின்னராசு அப்பாவின் முன் வந்துநின்றவன்“அப்பா!நான் இன்னிக்கி நோட்டு வாங்கிட்டுப் போகலைன்னா வாத்தியார் வகுப்பை விட்டு வெளியே அனுப்பிடு வாருப்பா. நோட்டு வாங்க முப்பது ரூபா குடுப்பா” என்று பயந்து கொண்டே அப்பாவிடம் கேட்டான். அவன் தன் மகன் இரு தோள்களை அன்புடன் பிடித்துக் கொண்டே “சின்னராசு!இன்னிக்கி ஒரு நாள் மட்டும் அப்பாவுக்காக, எப்படியாவது சமாளிப்பா. இன்னிக்கி எனக்கு வர்றகூலியெல்லாம் ஒன்னிடமே வந்து குடுத்திடுறேன்.. ”என்று உறுதிமொழி கொடுத்த வுடன், மகனும் “சரிப்பா” என்று நம்பிக்கையுடன் பள்ளிக்குச் சென்றான்.

வெள்ளைச்சாமியும் இன்று குடிக்கக்கூடாது என்ற மனஉறுதியுடன். இன்று வரும் கூலியெல்லாம் கொண்டு வந்து மகனிடம் கொடுத்து அவனுக்கு வேண்டிய நோட்டுப் புத்தகமெல்லாம் வாங்கிக் கொள்ள கொடுத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நடந்து செல்லும் போது, எதிரே வந்த குமார் மளிகைக் கடைக்காரர்“ வெள்ளச்சாமி இன்னிக்கி நம்ம கடைக்கு வந்து பருப்பு, அரிசி மூட்டையெல்லாம் இறக்கி போட வேண்டும் இன்னிக்கி சாயந்தரம் வரைக்கும் கடையில் உனக்கு வேலை இருக்கும்வா”என்று அவனை அழைத்துச் சென்றார். அவன் மூட்டையெல்லாம் இறக்கி வைத்து விட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு கிளம்பும் போது குமார் மளிகைக்காரர் அவனிடம் இரு நூறு ரூபாய் கூலியாக கொடுத்த வுடன், தன் மகன் சின்னராசு நோட்டு வாங்க பணம் கேட்டது தான் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. குஷியாக வீட்டை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

அவன் வேகமாக நடந்து வந்தவன் டாஸ்மாக்கடை அருகில் வந்தவுடன் தயங்கி நின்றான். ‘சரி நமக்குத்தான் இருநூறு ரூபாய் கூலி வந்திருக்கே மகன் சின்னராசு முப்பது ரூபாய் தான் நோட்டு வாங்க கேட்டான்’ என தனக்குத் தானே முடிவு செய்து கொண்டு டாஸ்மாக் கடைக்குள் நுழைந்தவன் அங்குள்ள பிளாஸ்டிக் சேரில் சென்று அமர்ந்தான்.

அவன் அமர்ந்தவுடன் தன் மகன் வயதை யொத்த ஒரு சிறுவன் அவன் முன்னே வந்து நின்றான். புதிதாக அந்தச் சிறுவன் டாஸ்மாக் கடையில் எடுபிடி வேலைக்காக வந்தவன் போல் தோன்றியது. அன்று தான் வெள்ளைச்சாமியும் அவனைப் பார்த்தான். சிறுவன் அவனிடம் “பிராந்தியா, விஸ்கியா” எது வேண்டு மென அவனிடம் கேட்டான். அந்தச் சிறுவனிடம் தான் கூலியாக வாங்கி வந்த இரு நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு, “எதாவது கொண்டுவா” என்றான். சிறுவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தவனை“ தம்பீ தம்பீ இங்கேவா” எனஅழைத்தான்.

அவன் முன்னால் வந்து நின்ற சிறுவனிடம் “தம்பி! இதற்கு முன் உன்னை நான் பார்க்கல்லயே. நீபடிக்கிற இந்த வயசிலே இப்படி டாஸ்மாக் கடையில் எடுபிடி வேலைக்கு வந்திருக்கியே. இங்க வந்தால் உனக்கு குடிப்பழக்கம் வந்து கெட்டுப் போயிட மாட்டாயா. உன்னோட அப்பா அம்மா எப்படி இங்க வேலைக்கு அனுப்பி னாங்க. நான் இப்படிக் கேட்கிறேன்னு வருத்தப்படாதே கோபப்படாதே தம்பி” என்று கவலையுடன் கேட்டான் வெள்ளைச்சாமி.

சிறுவன், முகத்தைக் கோபத்துடன் வைத்துக் கொண்டு கடுப்புடன் “போய்யா நான் ஒண்ணும் குடிகாரனாக மாற மாட்டேன். நான் டாஸ்மாக் கடையில் எடுபிடி வேலைக்கு வந்ததுக்குக் காரணமே, உன்னைப் போல் என்னோட அப்பா தான், என்னோடஅம்மாகுடிக்கவேண்டாம்குடிக்கவேண்டாம்என்றுஎவ்வளவுசொல்லியும்என்அப்பா கேட்காமல் குடித்துக்குடித்தே செத்துப் போயிட்டாரு. நான் குடிகாரனாக மாறிவிடுவேன்னு நீ என்னைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, நீ குடித்து குடித்து என்னோட அப்பா செத்துப் போனது போல் நீயும் செத்துப் போய், உன் மகனையும் இப்படி என்ன மாதிரி டாஸ்மாக் கடையில் எடுபிடி வேலைக்கு வராமல் நீ பாத்துக்கோ. அதற்கு நீ குடிக்காமல் திருந்தப் பாரு“என்று வெள்ளைசாமியிடம் கூறினான்.

சிறுவன் தன்னைப் பார்த்துக் கூறியதைக் கேட்டவுடன் தன்னோட முதுகிலும் உள்ளத்திலும் யாரோ சவுக்கடி கொடுத்தது போல், விழுந்தது போல் அப்போது வெள்ளைச்சாமி நன்கு உணர்ந்தான். உடனே சிறுவனிடம் தான் கொடுத்திருந்த இரு நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு“ தம்பீ!எனக்கு புத்தியில் உரைப்பதுபோலவே சொல்லி விட்டாய் இந்த சிறு வயதிலே நல்லாவே பேசறே. பேசியும் விட்டாய். நான் இந்த நிமிஷம் முதல் குடிக்க மாட்டேன் தம்பி. நீயும் கவலைப்படாதே நீயும் என்னோடகூட வா. என் மகனோடு உன்னையும் எப்படியாவது நான் கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறேன் வா“ என்று கூறி அந்தச் சிறுவனையும் கையோடு தன்னுடன் அழைத்துச் சென்றான்.

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்,
E mail psubramanian.family@gmail.com
Cell: 9894043308 – 984047950

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: